முஃதஸிலாக்களின் கோட்பாடுகளில் குர்ஆன் படைக்கப்பட்டது எனும் கோட்பாடு
மிக முக்கியமானதாகும். இக்கோட்பாடு இஸ்லாமிய வரலாற்றில் பாரிய தாக்கத்தை
ஏற்படுத்தியது. இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாக முஃதஸிலாக்களால் இது
கணிக்கப்பட்டது. அப்பாஸிய காலத்தில் இது அரச கொள்கையாக ஏற்றுக்
கொள்ளப்பட்டதுடன் ஒருவனின் மத நம்பிக்கையை மதிப்பிடும் அளவு கோலாகவும் இது
கணிக்கப்பட்டது. கலீபா மஃமூன் இதனை ஏற்றிருந்ததுடன் மற்றவர்களையும்
ஏற்குமாறு வற்புறுத்தினார். இத்துறையில் அவர் முஃதஸிலாக்களுக்கு தனது முழு
ஆதரவையும் கொடுத்தார்.
முஃதஸிலாக்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர்.
இக்கோட்பாடு இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு முரணானது மட்டுமன்றி
முஸ்லிம்களது நம்பிக்கையை பாதிக்கும் ஒரு அம்சமாகவும் காணப்பட்டது. இதனை
முஸ்லிம் அறிஞர்கள் வன்மையாக எதிர்த்து வந்தனர். எனினும் கலீபாக்களின்
அடக்கு முறைகளால் அந்த எதிர்ப்புக்கள் பயனளிக்கவில்லை. இக்கோட்பாடு
மார்க்கத்தையும் ஈமானையும் பாதிக்கவில்லை என கலீபா மஃமூன் கருதவில்லை என
இமாம் தபரி குறிப்பிடுகின்றார். இதனாலேயே மஃமூன் இவ்விடயத்தில் தீவிரமாக
நடந்து கொண்டார்.
இந்த வகையில் இக்கொள்கையை எதிர்ப்பவர்கள் குழப்பக்காரர்களாகவும் பிற்
போக்கு சிந்தனை வாதிகளாகவும் அரசினால் கருதப்பட்டார்கள். ஹி. 218 ல்
பக்தாத் கவர்னருக்கு இக்கொள்கையை ஏற்க மறுக்கும் அனைத்து அரச ஊழியர்களையும்
பதவி நீக்கம் செய்யும் படி கட்டளையிட்டார். நீதிபதிகளும் உயர்
அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு இக்கொள்கைக்கு சார்புடையவர்களா இல்லையா எனப்
பரீட்சிக்கப்பட்டனர். சிலர் அதனை ஏற்க வேறு சிலர் நிலைமையை அவதானித்து தனது
மன சாட்சிக்கு முரணாக அதனை ஏற்பதனைப் போல் பாசாங்கு செய்தனர். மற்றும்
சிலர் முற்றாக ஏற்க மறுத்ததுடன் அதற்கு எதிராகவும் செயற்பட்டனர்.
இத்தகையோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் கொடிய தண்டனைகளுக்கும்
உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இமாம் அஹ்மத் பின் ஹன்பல்
குறிப்பிடத்தக்கவராவார்.
கலீபா மஃமூனைத் தொடர்ந்து பதவி ஏற்ற அவரது சகோதரர் முஃதஸிம் பில்லா
இவ்விடயத்தில் மிகத் தீவிரமாக நடந்து கொண்டார். இவரது காலத்தில் இமாம்
அஹ்மத் மிகக் கொடூரமாக தண்டிக்கப்பட்டார். ஒவ்வொரு கசையடியின் பின்பும்
குர்ஆன் படைக்கப்பட்டது என்பதை ஏற்குமாறு வற்புறுத்தப்பட்டார்.
முஃதஸிமிக்கு பின் வந்தவர்களால் வாஸிலினது அவரை அடுத்து வந்தவர்களது
காலத்திலும் இக்கொள்கை படிபடியாக வீழ்ச்சியுற்றது. 10 வது அப்பாஸிய
கலீபாவான முதவக்கில் இக்கொள்கையை மிகக் கடுமையாக எதிர்த்ததுடன் இவர்களை
மார்க்க விரோதிகள் எனவும் பிரகடனம் செய்தார். அவர்கள் உயர் பதவிகளிலிருந்து
நீக்கப்பட்டதுடன் சிலவேளைகளில் தண்டனைக்கும் உற்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment