■ஷீயாக்கள்
இஸ்னாஅஸரிய்யா
இவர்கள் 12 இமாம்களை விசுவாசம் கொண்டவர்களாவர். 12வது இமாமான முஹம்மத்
என்பவர் ஹி.264ல் சாமர்ராவிலுள்ள பள்ளிக் குகைக்குள் மறைந்து விட்டார்
என்றும் உலக முடிவு நாளின் போது தோன்றி நீதியை நிலை நாட்டுவார் என்றும்
அவரே மஹ்தியாவார் என்றும் நம்புகின்றனர்.
இஸ்னா அஸரிய்யாவுக்கும் இஸ்மாயிலிய்யாவுக்கும் இடையிலான வேறுபாடு
01. இஸ்னா அஸரிய்யாக்கள் அலி ரழி அவர்களின் வழித் தோன்றலில் வந்த
முஹம்மத் அல் முந்தஸிர் வரையிலான 12 இமாம்களை விசுவாசம் கொள்கின்றனர்.
ஆனால் இஸ்மாயிலிய்யாக்கள் அலி ரழி அவர்களின் வழித் தோன்றலில் வந்த
இஸ்மாயில் வரையிலான 07 இமாம்களை மட்டுமே விசுவாசம் கொள்கின்றனர். ஏனைய 05
இமாம்களையும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
02. இஸ்னா அஸரிய்யாக்கள், 12வது இமாம் மறைவாக இருக்கின்றார் என்றும்
அவர் உலகிற்கு வழி காட்டுகின்றார் என்றும் அவர் இல்லாத போது அரசர் அவரது
பிரதிநிதியாக நின்று வழி காட்டுகின்றார் என்றும் நம்புகின்றனர். ஆனால்
இஸ்மாயிலிய்யாக்கள் தற்போதைய 14 வது அஹாகானை தமது இமாமாக ஏற்றுக்
கொள்வதுடன் அரசன் ஒரு போதும் இமாமின் பிரதி நிதியாக இருக்க முடியாது
என்கின்றனர்.
03. இஸ்னா அஸரிய்யாக்கள் முஹம்மத் என்பவர் தான் மஹ்தியாக வருவார் என்று
கூறுகின்றனர். ஆனால் இஸ்மாயிலிய்யாக்கள் அவர்கள் விசுவாசம் கொள்ளும் 07வது
இமாம் இஸ்மாயில் தான் மஹ்தியாக வருவார் என்று கூறுகின்றனர்.
04. இஸ்னா அஸரிய்யாக்கள் ஈமானின் வெளி அம்சங்களுக்கு முக்கியத்துவம்
அளிக்க இஸ்மாயிலிய்யாக்கள் ஈமானின் அந்தரங்க அம்சங்களுக்கு
முக்கியத்துவமளித்து இரகசிய வழிப்பாட்டை வலியுறுத்துகின்றனர்.
05. இஸ்னா அஸரிய்யாக்களைப் பொறுத்த வரையில் இஸ்மாயிலிய்யாக்களை விட
சுன்னீக்களுடன் ஓரளவு நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கின்றனர். ஆனால்
இஸ்மாயிலிய்யாக்கள் சுன்னீக்களை விட்டு வெகு தூரத்தில் இருக்கின்றனர்.
இவ்வாறு அரசியல் வரலாற்றில் தோன்றிய சீயாக்கள் இஸ்லாமிய வரலாற்றில்
குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். கிலாபத் அங்கீகாரம் அஹ்லுல்
பைத்தினருக்கே உரித்தானது என்ற அடிப்படைக் கோட்பாட்டை முன் வைத்து
அவ்வுரிமையை பெற்றுக் கொடுப்பதற்காக உலகின் பல பகுதிகளுக்கும் தம்
உறுப்பினர்களை அனுப்பி தமது கொள்கையைப் பிரபல்யப்படுத்த ஆரம்பத்தில்
அரசியல் கொள்கையுடன் தமது பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். பிற்பட்ட காலங்களில்
மதக் கோட்பாடுகளையும் சேர்த்துக் கொண்டதனால் அரசியல், சமய ரீதியாகச்
செயற்பட்டு வந்தனர்.
உஸ்மான் ரழி அவர்களின் காலப் பிற்பகுதியில் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி
செய்து அப்துல்லாஹ் பின் ஸபாவே இவ்வியக்கத்தின் தோற்றத்திற்கு அடிப்படைக்
காரணமாக விளங்கினான். அவனது புரட்சி உஸ்மானைக் கொலை செய்ததுடன் அலியைப்
பதவியில் அமர்த்தச் செய்தது. மிகக் குறுகிய காலத்தில் அவரும் கொலை
செய்யப்படவே உமையா ஆட்சி ஆரம்பித்தது. முஆவியாவின் காலத்தில் அமைதியாக
இருந்து சீயாக்கள் மீண்டும் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர். ஹுஸைன் ரழி
அவர்கள் கர்பலாவில் கொலை செய்யப்பட்டமையை ஆதாரமாக வைத்து ஆட்சிக்கு எதிரான
எதிர்ப்பை வலுப்படுத்திக் கொண்டனர். அச்சந்தர்ப்பத்தில் உமையா
ஆட்சியாளர்கள் இவர்களை அடக்குவதற்காக கடுமாயான நடவடிக்கைகளை
மேற்கொண்டார்கள். ஆயிரக்கணக்கான சீயாக்கள் கொலை செய்யப்பட்டார்கள். உயர்
பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். குத்பா மேடைகளில் இழிந்து
உறைக்கப்பட்டனர். உமையா ஆட்சிக் காலம் முழுவதும் இத்தகைய போராட்டங்களில்
நிலைத்திருந்தன. ஹி.132ல் உமையா வீழ்ச்சிக்கு இவர்களது போராட்டம் ஓர்
அடிப்படைக் காரணமாக அமைந்தது.
உமையா வீழ்ச்சியின் பின் சீயாக்கள் எதிர்பார்த்தற்கு மாற்றமாக அப்பாஸிய
ஆட்சி தோன்றியது. எனினும் முதலிரு அப்பாசிய ஆட்சியாளர்களும் அவர்களை
ஆதரித்தனர் என்றாலும் அடுத்து வந்த கலீபா மன்ஸூர் அவர்களது செல்வாக்கு
கூடினால் ஆபத்தெனக் கண்டு அவர்களை அடக்க முயன்றார். எனவே சீயாக்கள்
தொடர்ந்தும் போர் களத்தில் குதிக்க நேர்ந்தது.
ஹாரூன் ரஷீதின் காலத்தில் சீயாப் பிரிவைச் சேர்ந்த பர்மகீக்கள் அரச
சபையில் பிரதான இடம் வகித்து வந்தமையால் அப்பொழுது ஓரளவு சுமூக நிலை
காணப்பட்டாலும் அடுத்து வந்த காலங்களில் பர்மகீக்களின் அதிகாரம்
வீழ்த்தப்பட்டதனால் மீண்டும் அமைதியின்மை உருவாகியது. அப்பாஸிய காலத்தில்
தோன்றிய சில சிற்றரசுகள் ஆட்சியை நிறுவி அக்கொள்கையை பரப்புவதில்
ஈடுபட்டனர். குறிப்பாக கலீபா வலீதின் ஆட்சிக் காலத்தில் அவரது அடக்கு
முறையிலிருந்து விடுதலை பெற்ற இத்ரீஸ் என்பவரால் கி.பி.788ல் மொரோக்கோவில்
முதல் முதல் சீயா ஆட்சி தோற்றுவிக்கப்பட்டது.
கி.பி.909ல் பக்தாத் ஆட்சிக்கு முரணாக ஆபிரிக்காவில் நிறுவப்பட்ட
பாத்திமீக்களது ஆட்சி மற்றொரு சீயா ஆட்சியாகும். இதே போல் சவாலியர் –
சீயாவின் – ஆட்சியின் ஸ்தாபகரான சாஹ் இஸ்மாயில் சபவி என்பவர் சீயாக்களின்
07வது இமாமான மூஸா ஹாதியின் மாணவராக இருந்தமையால் அவர் சீயாக் கொள்கையை அரச
கொள்கையாக பிரகடனப்படுத்தினார். இமாமின் பிரதி நிதியாக நின்று ஆட்சி
நடாத்த முற்பட்டான். இதிலிருந்து தான் ஈரான், சீயாக்களது மத்திய தளமாக
இருந்து சீயாக் கொள்கையை பரப்பி வர முயன்றது.
ஆரம்பம் முதல் அடிக்கடி ஆட்சியாளர்களது எதிர்ப்புக்கு இலக்கான இவர்கள்
அடக்கு முறைக்கும் அநீதிக்கும் உற்படுத்தப்பட்டார்கள் என்பது மறுக்க
முடியாத உண்மையாகும். இவ்வகையில் பல்லாயிரக்கணக்கான சீயாக்கள்
அழிக்கப்பட்டனர். இந்நிலைமைகள் அவர்களை பெரும் சக்தியாக வளரச் செய்தன.
தியாகம் புரியும் மனப்பான்மையை அவர்களிடத்தில் வளர்த்து விட்டன. அவர்களது
விடா முயற்சியாலும் தியாகத்தாலும் ஆங்காங்கே சீயா ஆட்சிகளும் நிறுவப்பட்டு
அவர்களது கொள்கை வலுப் பெற்றது.
குறிப்பாக, இஸ்லாமிய அரசு அப்பாஸியரது இறுதிக் காலப் பகுதியில் ஐக்கியம்
சிதறுண்ட போது பல நவீன திட்டங்களுடன் சீயாக்கள் விரைவாக முன்னேறினார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் அரசின் மீது மங்கோலியர் மேற் கொண்ட படையெடுப்பு இவர்களை
மேலும் வலுப்படுத்தியது. அரசியல் காரணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட
இவ்வியக்கம் பொதுவாக முஸ்லிம்களது முன்னேற்றத்துக்கும் ஐக்கியத்துக்கும்
எப்பொழுதும் சவாலாக இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment