முஃதஸிலாக்கள் – ஆதாரங்களை எடுத்த வழிகள்

இவர்கள் பகுத்தறிவுக்கு வஹியை விட முக்கியத்துவம் கொடுத்து இதனடிப்படையில் தமது கருத்துக்களை நிறுவ முற்பட்டனர். பாரசீகம், ஈராக் சார்ந்த பிரதேசங்களில் இவர்கள் வாழ்ந்தமை அதற்கு அடிப்படைக் காரணமாகும். ஏனெனில் அப்பிரதேசங்களில் பல நாகரீக செல்வாக்கு அதிகரித்திருந்ததுடன் அங்கிருந்தவர்களில் அதிகமானோர் அரபியல்லாதவர்களாகவும் இருந்ததனால் இஸ்லாத்தின் உண்மை நிலையை புரியும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அத்தோடு பண்டைய தத்துவ ஞானிகளது கருத்துக்கள் இவர்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தமை இதற்கு மேலும் உரமூட்டியது. இவர்கள் ஹதீஸ் கலையில் ஆற்றல் பெற்றிருக்காமையினால் ஹதீஸ்களையும் மறுத்ததுண்டு. ஹதீஸ்களின் போலிகள் கலந்திருந்தமை இவர்களது நம்பிக்கையை மேலும் இழக்கச் செய்தது.

■சேவைகள்

01.அப்பாஸியக் காலத்தில் இஸ்லாத்துக்கெதிராக எழுந்த சவால்களை எதிர்ப்பதில் முன்னிலை வகித்தார்கள்.
02 . அரபு இலக்கிய , இலக்கண வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்புச் செய்தனர். இல்முல் கலாம் போன்ற தத்துவ ஞானத்தின் தோற்றத்திற்கு இவர்களே காரணமானார்கள்.
03. முஸ்லிம்கள் தத்துவ விசாரணையில் ஈடுபடவும் அவர்கள் மத்தியில் தத்துவ ஞானமும் தத்துவ விளக்கங்களும் தோன்றுவதற்கு வழி காட்டினார்கள்.
04. சமயக் கருத்துக்களை முதன் முதலில் தத்துவ ரீதியில் விளக்கினர்.

வீழ்ச்சி

01. கிரேக்க தத்துவத்தில் அதி தீவிர பற்றுக் கொண்டு , பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வஹியை புறக்கணித்து செயற்பட்டு வந்தமையால் சமயக் கருத்துக்களுக்கு முரணாக விடயங்களை சமயத்தின் பெயரால் வெளியிட முற்பட்டனர். இதனால் சமய வாதிகளும் அறிஞர்களும் இவர்களை கடுமையாக எதிர்த்தனர்.
02. ஆட்சியாளர்களது ஆதரவையும் ஆட்சியில் தமக்கிருந்த செல்வாக்கையும் பயன்படுத்தி தமது கருத்துக்கு முரண்பட்டவர்களை குறிப்பாக முஹத்திஸீன்களையும், புகஹாக்களையும் துன்புறுத்தியதால் பொதுமக்களதும் அறிஞர்களதும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகினர்.
03. அரசின் செல்வாக்கைப் பயன்படுத்தி சலுகைகள் பெற முற்பட்டமையால் கொள்கைக்காக தியாகம் செய்யும் தன்மையை இழந்தனர்.
04. பொது மக்களதும் அறிஞர்களதும் வெறுப்புக்குள்ளாகி விட்டதை அறிந்த ஆட்சியாளர்கள் அவர்களை புறக்கணித்தனர்.
இந்த வகையில் நோக்கும் போது முஃதஸிலாக்கள் எனப்படுவோர் தத்துவ ஞானிகளாக இருந்து தத்துவ ரீதியில் சமயக் கருத்துக்களை விளக்க முயற்சி செய்தார்கள். இஸ்லாத்திற்காக நன்மையை ஏவித் தீமையை தடுப்பதை தமது பொறுப்பாகவும் இஸ்லாத்தின் எதிரிகளை முறியடிப்பதை தமது கடமையாகவும் ஏற்று செயற்பட்டு வந்தார்கள். என்றாலும் இவர்கள் தவறுகளையும் இழைத்து விட்டனர். சுதந்திர சிந்தனைப் போக்குடையவர்கள் இத்தகைய தவறுகளை இழைப்பது இயல்பானதாகும்.

No comments: