நாகரிகம்.

"இஸ்லாமிய நாகரிகம்" என்றால் என்ன? என்று அறிய முன் "நாகரிகம்" என்ற பதம் அறியப்படவேண்டும்.

நாகரிகத்தைப் பற்றி ஆராயும் போதெல்லாம் பண்பாடு, கலாசாரம் என்ற சொற்களும் இணைத்தே ஆராயப்படுகின்றது.

பண்பாடு, கலாசாரம் என்ற இரு சொற்களும் சில வேளைகளில் இணைத்தே பயன்படுத்தப்படுகின்றது.

பண்பாடு, கலாசாரம் என்பன மனித உள்ளம், சிந்தனை, உணர்வுகள் என்பன தொடர்பான விடயங்களையும் நாகரிகம் என்பது உளப்பாங்கு, சிந்தனை, உணர்வுகள் என்பனவற்றின் பிரதிபலிப்பால் உண்டாகும் வெளிப்பாடுகளே என்றும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே பண்பாடு, கலாசாரம் என்ற வார்த்தைகள் உள்ளத்தில் உதிக்கும் சிந்தனைகள், உணர்வுகள், இலட்சியங்கள், கொள்கைகள் போன்றவற்றினால் உண்டாகும் அபிப்பிராயங்களும் எண்ணக்கருக்களும் ஆகும். அதே வேலை நாகரிகம் என்பது இச் சிந்தனைகள், உணர்வுகள், இலட்சியங்கள், கொள்கைகள் என்பவற்றின் அடிப்படையில் வெளிக்கொண்டுவரப்படுகின்ற உடை, நடை, பாவனை, பழக்க வழக்கங்கள், அறிவியல் கலைகள், வாழும் முறைகள் போன்ற வெளிப்படுத்தப்படுகின்ற நடவடிக்கைகளைக் குறிக்கும்.

நாகரிகம் ஒரு பண்பாட்டை அடிப்படையாக கொண்டிருப்பினும் பல்வேறு கட்டங்களில் பல்வேறு விதமாக காட்டப்படலாம். கால மாற்றம், சமூக மாற்றம், அறிவியல் முன்னேற்றம் என்பன நாகரிகத்தை ஒரு உருவிலிருந்து இன்னுமொரு உருவிற்கு மாற்றியமைக்கும் காரணிகளாகும். எனவே ஒரு பண்பாடு எத்தனை நாகரிகங்களையும் தோற்றுவிக்க முடியும்.

நாகரிகம் எனும் பதம் மனித இனம் விழிப்படைந்தது முதல் வழக்கில் இருந்து வருகின்றது. "நகர வாழ்வின் விளைவுகள் அல்லது பெறுபேறுகளையே நாகரிகம் எனும் பதம் குறிக்கின்றது" என்று -இப்னு கல்தூன்- குறிப்பிடுகின்றார். "நாகரிகம் என்பது ஒரு இனத்தின் பண்புகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல். அது கண்களுக்கு புலப்படக்கூடிய சடப்பொருட்களின் அபிவிருத்தியையும் பொது வாழ்வின் முன்னேறறத்தையும் குறிக்கின்றது" என்று -கலாநிதி அமீர் ஹசன் சித்தீக்- குறிப்பிடுகின்றார்.


பொழிப்பு :
  • கலாசாரம், பண்பாடு = புறத்தோற்றம். நாகரிகம் = வெளித்தோறறம்

No comments: