புனித கஃபா

கஃபா புனித மக்காவில் அமையப் பெற்றிருக்கின்ற காரணத்தாலும், புனித ஹரமைக் குறித்து நிற்பதாலும் இந்த தலைப்பினை கஅபா ஆலயம் பற்றியும், அதனோடு தொடர்பான அடையாளச் சின்னங்கள் பற்றியும் இங்கு காணவிருக்கின்றோம்.

கஃபாவின் அமைவிடம் : சவூதி அரேபியாவின் மக்கா நகரில் அமைந்திருக்கின்ற புனித கஅபா ஆலயம் பூமியின் மையப்பகுதியில் அமைந்திருக்கின்றது. இதை எகிப்து நாட்டைச் சேர்ந்த புவியியல் ஆய்வாளர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். இது பற்றி அறிஞர் ஜாகிர் நாயக் என்பவரும் தனது உரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மக்காவின் மறுபெயர்கள்:
இது மனிதர்கள் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கி, வழிபட பூமியில் நிறுவப்பட்ட முதலாவது ஆலயமாகும். இதன் சிறப்பைப் பிரதிபலிப்பதற்காக அது பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

அல்லாஹ்வின் வீடு, (நபிமொழிகள்),
அல்பைத்துல் அதீக், (அல்ஹஜ்:29, 33), பழமையான வீடு, புராதன வீடு.
அல்பைத், (அல்பகரா: 125, 127, 158), (ஆலுஇம்ரான்:97), (அல்அன்ஃபால்:35, அல்ஹஜ்:26), (குரைஷ்:3). குறிப்பாக அந்த இல்லம்.
அல்பைத்துல்ஹராம் (அல்மாயிதா, 97) சங்கையான இல்லம்.
அல்மஸ்ஜிதுல் ஹராம், (அல்பகரா: 144,149,150, 196), அல்மாயிதா:2, அல்அன்ஃபால்: 34, அத்தௌபா:7, 19, 28), (அல்இஸ்ரா:1, 7), அல்ஹஜ்: 25, அல்ஃபத்ஹ்: 25, 27).
அல்கஅபா, (அல்மாயிதா: 95, 97). நாட்சதுரமானது
அல்பலத், அல்பல்தா. இந்த ஊர்: (இப்ராஹீம், வச: 35, அந்நம்ல், வச: 91, அல்பலத், 1,2,
அல்பலதுல் அமீன், (அத்தீன், வச: 3), உம்முல்குரா, அல் அன்ஆம், 92, அஷ்ஷ¨ரா, வச:7.
குறிப்பு: கஅபதுல்லாஹ் என்ற சொல்லை நாம் உபயோகித்தாலும் அதை எந்த கலைக்களஞ்சியத்திலும் காணமுடியவில்லை.

கஃபா என்பதன் பொருள்:
சதுரவடிவிலான பெட்டி, கட்டம் போன்ற பொருள் உண்டு. கஅபா சதுரவடிவம் கொண்ட அமைப்பில் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கின்றது.

கஃபாவைக் கட்டியவர்:
நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள். கட்டுமானப்பணிக்கு துணையாக அவர்களின் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.. அன்னை ஹாஜரா (ரழி) அவர்கள் தனது மகனோடு தன்னந்தனியே கஅபா பள்ளத்தாக்கில் வசித்து வந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது இறக்கையினால் நிலத்தில் அடித்தார்கள். உடனே ஜம்ஜம் நீரூற்று உருவானது.

அந்த நேரத்தில் ஹாஜராவிடம்: “இதோ இந்த இடத்தில் அல்லாஹ்வின் வீடு உள்ளது. அதை இந்தச் சிறுவனும், அவனது தந்தையுமாக கட்டுவார்கள்” என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறியதாக புகாரியில் இடம் பெறும் செய்தியைப் பார்க்கின்றோம்.

அந்த முன்னறிவிப்பு இஸ்மாயீல் (அலை) அவர்கள் இளம்பருவத்தை அடைந்த போது நடந்தேறியது. அவர்களை அவர்களின் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்து “ மகனே அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளை பிறப்பித்துள்ளான், அதற்கு நீ துணை நிற்பாயா? எனக் கேட்டார்கள், அதற்கு அவர்கள் ஆம். (நிச்சயமாக) என்றார்.

உடனே அவர்கள், குறித்த அந்த இடத்தை சுட்டிக்காட்டி, அல்லாஹ் இந்த இடத்தில் அவனது வீட்டை அமைக்கும் படி கட்டளையிட்டுள்ளான் என்று கூறினார்கள். வெள்ளப் பெருக்கு காரணமாக அதன் வலது, மற்றும் இடது பக்கங்கள் தேய்ந்து, தூர்ந்து குட்டிச்சுவர் போல் அது காட்சி தந்தது. அந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் ஆலயத்தை இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனின் உதவியுடன் கட்டி முடித்துப் பிரார்த்தனையும் செய்தார்கள். (புகாரி).

இந்த இடத்தில்தான் அல்லாஹ்வின் வீடு உள்ளது என்று வானவர் கூறியதையும், பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மகனிடம் கூறியதையும் பார்த்தால் அந்த இடத்தில் அல்லாஹ்வின் ஆலயம் அடையாளப்படுத்தப்பட்டு இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். ஆனால் அது வணங்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் நாம் தேடிப்பார்த்தவரை கிடைக்கவில்லை, அதைக்கட்டி முடித்த பின்பே வணக்கவழிபாடுகள் தொடங்கின என்பதை குர்ஆன் வசனங்கள் மூலமும், நபிமொழிகள் மூலமும் அறியலாம். (அல்லாஹ்வே மிக அறிந்தவன்).

கஃபாவின் பராமரிப்பு:
கஅபாவை ஆரம்ப காலத்தில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ‘ஜுர்ஹும்” கோத்திரத்தினர் பராமரித்து வந்தனர். அது இஸ்மாயீல் (அலை) அவர்கள் திருமணம் முடித்துக் கொண்ட கினானா என்ற கோத்திரமாகும்.
இவர்களுக்கு எதிராக குஸாஆ என்ற குரைஷியக் கோத்திரம் சண்டை போட்டு பல ஆண்டுகளுக்கு பின்னால் அதை தம் வசமாக்கிக் கொண்டு, நிர்வகித்து வந்தனர். இவர்களின் காலத்தில்தான் சிலைகள் இல்லாத தூய்மையான புனித அந்த இல்லத்தில் சிலை வைக்கப்பட்டு, அதன் நோக்கம் மாசுபடுத்தப்பட்டது. அந்தப்பாவத்தை முதல் முதலில் அம்ர் பின் லுஹை அல்குஸாயி என்பவனே அதனுள் அரங்கேற்றினான்.

அதனால் நபி (ஸல்) அவர்கள் அம்ர்பின் லுஹைல் அல்குஸாயை நரகத்தில் அவனது குடல்களை இழுத்துக் கொண்டு வேதனை செய்யப்படுவதைக் கண்டேன், அவனே கஅபாவில் முதல்முதலில் சிலை வணக்கத்தை உண்டாக்கியவன் எனக் கூறினார்கள். (புகாரி).

குரைஷியரின் பராமரிப்பு:
இவர்களுக்கு பின்பு குரைஷியரிடம் அதன் நிர்வாகம் கைமாறியது. நபி (ஸல்) அவர்களின் நான்காவது பாட்டனாராகிய குஸைப் பின் கிலாப் கஅபாவை நிர்வகித்துக் கொண்டிருந்த குஸாயி கோத்திரத்திற்கு எதிராக தொடுத்த உக்கிர போரின் விளைவாக அவர்களிடம் இருந்து அதன் ஆட்சியை குரைஷியர் கைப்பற்றும் நிலை ஏற்பட்டது.

இவர் குரைஷியரின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பதும், அவர்கள் மத்தியில் செல்வாக்குமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவர்களின் ஆட்சியிலும் புனித மக்காவில் பல சமூகக் கொடுமைகளும் அரங்கேறவே செய்தன. இவர்களின் ஆட்சியில்தான் கஅபாவினுள் 360 சிலைகள் வைக்கப்பட்டன. அவற்றை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஹிஜ்ரி 8 ம் ஆண்டு மக்கா வெற்றியின் போது ‘சத்தியம் வந்தது, அசத்தியம் ஒழிந்தது, அசத்தியம் ஒழிந்தே தீரும் என்ற திருமறை வசனத்தைக் கூறியவர்களாக உடைத்தெறிந்தார்கள். (பார்க்க : புகாரி, முஸ்லிம்). (இக்திழாபுஸ்ஸிராதில் முஸ்தகீம்)

கஃபாவின் திறப்பு
இஸ்லாத்திற்கு முன்னர் ஜாஹிலிய்யாக் காலத்தில் குஸை பின் கிலாப் என்பவர் தனது மகன் அப்துத் தார் என்பவரிடம் அதன் சாவியை ஒப்படைத்திருந்தார், அதை அவர் தனது மகன் உஸ்மான் என்பவரிடம் ஒப்படைத்தார். இறுதியாக ஹஜபிய்யூன் கஃபாவின் சாவிகளுக்கு பொறுப்பான நிர்வாகிகள் என்றழைக்கப்படும் அந்த கோத்திரத்தாரில் ஒருவரான உஸ்மான்பின் தல்ஹா என்பவரிடம் அதன் சாவி (திறப்பு) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை ஆண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்களுடன் இஸ்லாத்தில் இணைந்தார்கள். இவர்கள் மரணிக்கின்ற வரை இந்தப் பொறுப்பில்

நிலைத்திருந்தார்கள் அதன் பின்னால் அவர்களின் உறவினர்களில் ஒருவரான ஷைபா என்பவர் பொறுப்பேற்றார்.
ஹிஜ்ரி 8ல் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் உஸா, பிலால் (ரழி) ஆகியோருடன் கஅபாவின் மேற்புறமாக வந்து அதனுள் ஒட்டகத்தில் பிரவேசித்தார்கள். அங்கு அதைக் கட்டினார்கள் , பின்பு, அதன் பொறுப்பாளரான உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபி (ரழி) அவர்களிடம் கஅபாவைத் திறந்து விடுமாறு

கூறினார்கள், அதன் கதவை மூடிவிட்டு அங்குள்ள தூண்களுக்கு மத்தியில் தொழுதார்கள், பின்பு, நீண்ட நேரம் அங்கு இருந்துவிட்டு பின்பு வெளியேறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

கஃபாவின் சாவிப் பொறுப்பு:
இது பனுஷைபா கோத்திரத்தாரிடம் இருந்தது. இவர்களை ஹஜபிய்யூன் என்று அழைப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் திறப்பை ஹுதைபியா உடன்படிக்கை காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபி (ரழி) அவர்கள் தனது கைவசம் வைத்திருந்தார்கள், மக்கா வெற்றியின் போது அவரிடம் திறக்கும்படி கூறிய நபி (ஸல்) அவர்கள் , அதை அவரிடமும், அபூஷைபா என்பவரிடமும் ஒப்படைத்தார்கள். (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல்பாரி).

அந்தப் பொறுப்பினை இன்று வரை அந்த பரம்பரையில் வந்தவர்களே பொறுப்பாளர்களாக இருந்து வருகின்றனர். (மஜல்லதுல் ஜாமிஅத்தில் இஸ்லாமிய்யா வெளியீட்டு எண்:23, பக்கம்:61)

கஃபாவை தகர்க்க முயற்சி:
அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து கஅபாவை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் அலகுகளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப் படையை மென்று துப்பிய வைக்கோலைப் போல் அல்லாஹ் ஆக்கினான் என்பதை அல்ஃபீல் அத்தியாயம் தெளிவு படுத்துகின்றது. அபாபீல் பறவைகள் சுமந்து வந்தது அணுவைத்தான் என்று விளக்க முற்படுவது அறியாமையின் உச்சமாகும்.

No comments: