வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் அனைத்துக் காலங்களிலும் மனித இனம் முழுமைக் கும் நன்நெறி வகுத்தளித்த அற்புத மார்க்கம் இஸ் லாம். அதில் சட்டத் திருத்தங்கள் இல்லை. அதற்கான தேவையுமில்லை. அதற்கான அனுமதி உலகில் எந்த மனிதருக்கும் எக்காலத்திலும் வழங்கப்படவுமில்லை. 1400 வருடங்களுக்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாயிலாக அல்லாஹ் வகுத்தளித்த நெறிதான் இன்றுவரை இஸ்லாமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. யுக முடிவு நாள்வரை அந்நெறியே இஸ்லாத்தின் நன்னெறி யாகத் திகழும்.
நாள்தோறும் உலகில் பிறக்கும் எண்ணிலடங்கா மாற்றங்களை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்கி றது?! என்ற கேள்வி, இமைகளை மூட தடையாய் அமைந்துள்ளது உண்மைதான்! 14 நூற்றாண்டுகள் கடந்து விட்டன. ‘இதற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை’ என்ற பட்டியல் காலியாகவே தொங்கிக் கொண்டி ருக்கிறது. இதில் மிகவும் ஆச்சரியமான மற்றொரு தகவல் என்னவென்றால் முன்னேற்றத்தின் அடுத்த டுத்த கட்டத்திற்கு மனிதனை இஸ்லாம் விரைவாக அழைத்துச் செல்வதுதான்!
பிறந்த வேகத்திலேயே இறந்த போன இஸங்களுக்கு மத்தியிலும் ஆன்மீகத்தை மட்டுமே போதித்துக் கொண்டிருக்கும் மதங்களுக்கு மத்தியிலும் இஸ்லாம் தனது தனித்துவத்தை 14 நூற்றாண்டுகளாக நிலை நாட்டிக் கொண்டிருக்கின்றது. ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும் தரும் முக்கியத்துவமே இதன் பிரதான காரணம் எனலாம். அறிவியல் முன்னேற்றங்களை மனித இன பாது காப்பு விதிகளால் வார்த்தெடுக்கும் இஸ்லாம், மனித சிந்தனையில் தோன்றும் கசடுகளை களையெடுத்து, தூய்மையாக்கி, தெள்ளிய நீரோடையாய் ஆரோக்கிய மான முன்னேற்றத்திற்கு வழிவகை செய்கிறது.
இவ்வாறு இஸ்லாம் வகுத்தளித்த சிந்தனை புரட்சி களில் ஒன்றுதான் ‘இஜ்திஹாத்’ எனும் ஆய்வு முயற்சி! மனித சமூகம் அன்றாடம் சந்திக்கும் புதிய பிரச்சனைகளுக்கு மார்க்கத் தீர்வு காணும் அறிவு சார்ந்த பணி அது!
இஸ்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் என்பதால் அதன் அடிப்படை மூலாதாரங்களாக அல்குர்ஆன், ஸ§ன்னா ஆகிய இரண்டு மட்டுமே காணப்படுகின்றன. நபி (ஸல்) அவர்களது மரணத்து டன் பூரணப்படுத்தப்பட்ட இந்த மார்க்கத்தில் மேலதிகமாக ஒன்றைச் சேர்ப்பதற்கோ அல்லது இருக்கின்ற ஒன்றை இல்லாமல் நீக்குவதற்கோ யாருக்கும் உரிமை இல்லை என்பது மிக முக்கியமான அடிப்படையாகும். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் கூறும் நடைமுறைப் பிரச்சினைகளை விளங்குவதற்காக மேற் கொள்ளப்படும் முயற்சியே ‘இஜ்திஹாத்’ என்றழைக்கப்படுகிறது.
‘இஜ்திஹாத்’ சொல் விளக்கம்
இஜ்திஹாத் என்ற சொல் ‘ஜுஹ்த்’ (முயற்சி) அல் லது ‘ஜஹ்த்’ (கஷ்டம்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். மொழி ரீதியாக இப்பதம் ஒரு விஷ யத்தை நிறைவேற்றுவதற்காக அல்லது ஒரு விஷயத்தை அடைந்து கொள்வதற்காக முயற்சித்தல் அல்லது பாடுபடுதல் என்ற கருத்தைத் தருகின்றது.
இஸ்லாத்தின் பார்வையில் ‘இஜ்திஹாத்’ என்றால் என்ன என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் பின்வரும் வரை விலக்கணம் மிகப் பொருத்தமானதாகக் காணப்படு கின்றது.
“இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களின் ஆள மான கருத்துக்களில் இருந்து ஷரீஆ உள்ளடக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்ப்புகளைப் பெறுவதற்கு ஒரு சட்டத்துறை அறிஞர் தனது ஆற்றல்களைப் பிரயோகிப்பதே ‘இஜ்திஹாத்’ ஆகும்.
இவ்விளக்கத்திலிருந்து ‘இஜ்திஹாத்’ பிரயோகிக்கப் பட வேண்டிய பகுதி இஸ்லாமிய சட்டத்துறை ( பிக்ஹ§) தான் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. நம்பிக்கையோடு தொடர்பான (அகீதா) விஷயங்கள் அல்குர்ஆனிலும் ஸ§ன்னாவிலும் தெளி வாகச் சொல்லப்பட்டிருப்பதால் அவற்றில் இஜ்திஹா தைப் பிரயோகிக்க முடியாது என்பது மிகப் பெரும் பாலான அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
அவ்வாறே அல்குர்ஆன் ஸ§ன்னாவில் ஆதாரம் இல்லாத விஷயங்களை மார்க்கத்தில் உருவாக்கி விட்டு அவற்றை உருவாக்குவதற்கு இஜ்திஹாத் கார ணம் என்று கூறமுடியாது. ஏனெனில் அவ்வாறு உரு வாக்கப்படும் அனைத்தும் பித்அத்தாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகளாகும்.
இஜ்திஹாதின் தேவை
இஜ்திஹாத் இஸ்லாமிய சட்டக் கலையின் ஒரு தவிர்க்க முடியாத தேவையாகும். சட்டத்துறையின் வளர்ச்சியும், விருத்தியும் இஜ்திஹாதிலேயே தங்கியுள் ளது எனலாம். அவ்வப்போது எழும் சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை விளக்கி வைப்பது இஜ்திஹாதாகும். இஜ்திஹாதின் வாசல் திறக்கப்படாவிட்டால் நவீன காலப் பிரச்சினைகள் பலவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வது சாத்தியமற்றதாகி இருக்கும்.
இஜ்திஹாதிற்கான நபி (ஸல்) அவர்களின் அனுமதி
“தீர்ப்புச் சொல்பவர் (ஹாகிம்), இஜ்திஹாத் செய்து அவரது முடிவு சரியாக அமைந்தால் அவ ருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவரது முடிவு தவறாக அமைந்து விட்டால் அவருக்கு ஒரு கூலி உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ருப்னுல் ஆஸ் (ரழி), நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸின் மூலம் இஜ்திஹாத் செய்வதை நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டுவதை விளங்கலாம். உண்மையில் முஸ்லிம் சமூகம் அறிவியல் துறைகளில் முன்னேற்றமடைவதற்கு வழிவகுத்த காரணிகளில் முக்கியமானதாக இருப்பது இஸ்லாம் இஜ்திஹாதிற்கு அளித்த அங்கீகாரமும் உந்துதலுமே என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் இஜ்திஹாதிற்கான அனுமதியை வழங்கியதனால்தான் நபித்தோழர்கள் நபியவர்கள் உயிருடன் இருக்கும்போதே இஜ்திஹாதில் ஈடுபட்டார்கள்.
· அஹ்ஸாப் யுத்தம் முடிந்து திரும்பிய நபியவர் கள், ஸஹாபாக்கள் சிலரை பனூ குரைழாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்களை அனுப்பும்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” எனக் கூறினார்கள். பனூ குரைழாவை நோக்கி செல்லும் வழியில் சிலர் அஸர் தொழுகைக் கான நேரத்தை அடைந்து கொண்டார்கள். அப்போது “ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற நபியவர்களின் ஹதீஸைப் புரிந்து கொள்வதில் அவர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் தோன்றின. சிலர் பனூ குரைழாவுக்குச் சென்றுதான் அஸரைத் தொழ வேண்டுமெனப் புரிந்து கொண்டார்கள். மற்றும் சிலர் அவ்வாறல்ல, நேரமாகிவிட்டதால் இவ்விடத்திலேயே தொழ வேண்டுமெனக்கூறி அங்கு தொழுதனர். பின்னர் இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எத்தி வைக்கப் பட்டபோது இரு சாராரில் யாரையும் அவர்கள் கண்டிக்கவில்லை என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்கள் : புகாரி, முஸ்லிம்)
“ பனூ குரைழாவில் அன்றி யாரும் அஸரைத் தொழ வேண்டாம்” என்ற ஹதீஸைப் புரிந்து கொள் வதற்காக அவர்கள் இஜ்திஹாத் செய்திருப்பதைக் காணலாம். சிலர் இந்நபிமொழியின் நேரடிக் கருத் தைப் புரிந்து கொள்ள, ஏனையோர் அது கூறும் உள்ளார்ந்த கருத்தைப் புரிந்தார்கள். அதாவது, அஸ ருத் தொழுகைக்கு அங்கு சென்றடையக்கூடியவாறு வேகமாகச் செல்ல வேண்டுமென்பதே நபியவர்கள் அவ்வாறு கூறியதன் நோக்கம் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.
· ஸஹாபாக்களில் இருவர் குளிப்புக் கடமை யானவர்களாக இருந்தனர். அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. அவர்களில் ஒருவர் தயம்மும் செய்து கொண்டு தொழுதார். மற்றவர் தொழவில்லை. இருவ ரும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிய போது அவர்களில் எவரையும் நபியவர்கள் குறை கூற வில்லை என தாரிக் பின் ஷிஹாப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்கள் : அஹ்மத், நஸாஈ )
· நபித் தோழர்கள் இருவர் ஒரு பயணத்தில் ஈடு பட்டிருந்தனர். தொழுகைக்கு நேரமாகியது. அவர்களி டம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே, தூய்மையான மண்ணினால் தயம்மும் செய்தனர். பின்னர் தொழு கையின் நேரம் முடிவடையும் முன்னரே நீரைப் பெற் றுக் கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தொழுகை யைத் திருப்பித் தொழுதார். அடுத்தவர் திருப்பித் தொழவில்லை. பின்னர் இருவரும் நபி (ஸல்) அவர்களி டம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி யவர்கள் திருப்பித் தொழாதவரைப் பார்த்து “ சரியாக ஸ§ன்னாவைச் செய்தீர். உனது தொழுகை உனக்குப் போதுமானதாகும்” என்றார்கள். திருப்பித் தொழுத வரைப் பார்த்து “ உனக்கு இரண்டு கூலிகள் கிடைக் கும்” என்று கூறினார்கள் என்று அபூ ஸஈத் அல் குத்ரீ (ரழி) அறிவிக்கிறார்கள். ( நூல்கள் : அபூதாவூத், பைஹகீ, ஹாகிம், தபரானீ, தாரகுத்னீ )
மேற்படி மூன்று நிகழ்வுகளும் ஸஹாபாக்கள் இஜ்தி ஹாத் செய்திருப்பதையும் அதனை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருப்பதையும் காண முடிகின்றது. இஜ்தி ஹாத் செய்வதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இருந்தத னாலேயே அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக் கும்போது இஜ்திஹாத் செய்தது போன்று அவர்கள் மரணித்த பின்னரும் மிகப்பரந்த அளவில் இஸ்லாமிய சட்டத்துறையில் இஜ்திஹாதைப் பிரயோகித்திருப்பதை ஆதாரபூர்வமான செய்திகளினூடாக அறிய முடிகின்றது.
இஜ்திஹாதின் ஒழுக்கங்கள்
இவ்வாறான செய்திகளிலிருந்து இஜ்திஹாதுடைய விஷயத்தில் நபித்தோழர்கள் கடைப்பிடித்த சில ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
1.- குறிப்பிட்ட ஒரு ஸ§ன்னாவைப் புரிந்து கொள் வதற்காக நபித்தோழர்கள் முயற்சி செய்து ஒரு முடி வுக்கு வரும்போது அதே ஸ§ன்னாவைப் புரிந்து கொள்வதில் மாற்றுக் கருத்தைக் கொண்டோரை அவர் கள் பாவிகள் பட்டியலில் சேர்க்கவோ அல்லது அவர் கள் வழிகேடர்கள் என்று கூறவோ முயற்சிக்கவில்லை.
2-. தமது கருத்தை மாற்றுக் கருத்தை உடையோரிடம் திணிக்க முற்படவில்லை.
3-. தமது இஜ்திஹாதின் அடிப்படையில் தமக்கு சரி என்று பட்டதைச் செய்வதில் அவர்கள் பின் நிற்கவில்லை.
4-. இஜ்திஹாதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அவர்களிடையே முரண்பாடுகளையும் பிரிவினைகளை யும் தோற்றுவிக்கவில்லை.
இந்த ஒழுங்குகள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவைகளாகும்.
ஆக, இஜ்திஹாத் அல்குர்ஆனையும் ஸ§ன்னாவை யும் புரிந்து கொள்வதற்காக இஸ்லாம் அங்கீகரித்து ஆர்வமூட்டிய ஒரு வழிமுறையாக இருக்கின்றது. அதனை சரியாகப் புரிந்து கொண்டு சரியாக அதைப் பிரயோகிக்க அதற்குத் தகுதியானவர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு அல்லாஹ் உதவி புரிவானாக!
No comments:
Post a Comment