“தப்ஸீர்” என்னும் சொல் ஃபஸ்ஸர, விளக்கினான் தெளிவு படுத்தினான் என்னும் வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். “தஃப்ஸீர்” என்னும் சொல்லுக்கு “விளக்கம், தெளிவு” என்னும் பொருளில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
وَلَا يَأْتُونَكَ بِمَثَلٍ إِلَّا جِئْنَاكَ بِالْحَقِّ وَأَحْسَنَ تَفْسِيراً
(முஹம்மதே!)அவர்கள் எந்த உதாணத்தைக் கூறியபோதினும் (அதைவிட) உண்மையானதையும், அழகிய விளக்கத்தையும் நாம் உமம்மிடம் கொண்டு வருவோம்.(அல்புர்கான் : 25:33)
இங்கே “அழகிய விளக்கம்” எனக்குறிப்பிட ” َأَحْسَنَ تَفْسِيرا ” “அஹ்ஸனு தஃப்ஸீரா” என்னும் சொல் இங்கு ஆளப்பட்டிருக்கிறது.“ஷரீஆவின் கண்ணோட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது அருளப்பட்ட அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை விளக்கவும், அதன் பொருளை தெளிவுபடுத்தவும், அவற்றின் நுட்பமான கருத்துக்களையும், சட்டங் களையும் அலசி ஆராயும் கலைக்கு “தஃப்ஸீர்” எனப்படும்.
தஃப்ஸீர் மிகவும் தேவை!
கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள், பண்பு நலன்கள்,கொடுக்கல் வாங்கல்கள், செயலாற்றும் வழிமுறைகள் போன்றவற்றை சரியாகப் புரிந்து கொளவதற்கு தஃப்ஸீர் கலை மிகவும் இன்றியாமையாததாகும்
தேவைக்கான காரணங்கள்:-
1.குர்ஆன் மிக உயர்ந்த இலக்கியமாகவும், நிறைந்த பல பொருளை உள்ளடக்கிய குறைந்த சொற்களாகவும் உள்ளது. அது காட்டும் பொருட்செறிவை விவரிப்பதும் அதில் புதைந்துள்ள பல நுட்பங்களை தெளிவுபடுத்திக் காட்டுவதும் அவசியமாகும். குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட சூழ்நிலைகளையும்,பின்னணிகளையும் புரிந்து கொண்டாலே அது வலியுறுத்தம் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.(உ-ம் 108 வது “வல்அஸ்ரு” அத்தியாயம்)
2. சில வசனங்கள் வெளிப்படையாக ஒரு கருத்தைக் காட்டலாம். ஆனால் அதன் உட்பொருளோ சில முக்கிய நோக்கங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும்.அதைப் பற்றிய விவரங்களைத் தெரிவது அவசியமாகும்.
3. குர்ஆனின் சில வசனங்கள் சில பின்னணிகைளைக் கொண்டதாக அருளப்பட்டிருக்கும். அதன் காரணத்தைப் புரிந்து கொண்டாலே அதைத் தெரிந்து கொள்ள முடியும்.இல்லையேல் அது தொடர்பான வசனங்களுடன் மோதுவதாகத் தெரியும்.(உ-ம் மது பற்றிய வசனம்- 4:43)
4. குர்ஆன் கூறும் சில சட்டங்களை ஸுன்னா (நபிமொழிகள்) வாயிலாகவே) புரிந்து கொள்ளமுடியும்.பொதுவாகக் கூறப்பட்டி ருக்கும் அந்த வசனங்களை குறிப்பாகச் சொல்லி விளக்கப்பட வேண்டும். அது குறித்து நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கச் செயல்மூலம் காட்டி விளக்கயுள்ளனர்.ஆகவே ஸுன்னாவின் பங்கைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். (உ-ம்) அகீமுஸ்ஸலாத்த வ ஆத்துஸ்ஸகாத்த போன்ற வசனங்கள். (பார்க்க- 2:43,83,110, 4:77,103,22:78,24:56, 58:13,73:20)
குர்ஆன் (தஃப்ஸீர்) விரிவுரை செய்வதற்குரய நிபந்தனைகளும், தகுதிகளும்.
1. இஸ்லாமியக் கொள்கையில் ஆழ்நத ஞானமும்,உறுதியும் வேண்டும். இல்லையெனில் தனது தவறான கெள்கையின் பால் மக்களை திசைதிருப்பிவிடுவார்கள்.
2. குர்ஆனுகுக்கு குர்ஆனைக் கொண்டே விளக்கமளிக்கவேண்டும். ஓரிடத்தில் சில வசனங்கள் தெளிவில்லாமலிருக்கும். மற்றொரு இடத்தில் அதை விளக்கும் வேறொரு வசனம் வரும். பிறிதொரு இடத்தில் ஒரு வசனம் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கும.இன்னொரு இடத்தில் அதே வசனம் வரிவாகக் கூறப்பட்டிருக்கும்.இவற்றைத் தெளிவாகத் தெரிந்து குர்ஆனிலிருந்தே குர்ஆனை விளக்கவேண்டும்.
3. குர்ஆனுக்கு ஸுன்னாஹ் (ஹதீஸ்கள்) விரிவுரையாகவும், தெளிவுரையாகவும் அமைந்திருக்கும். அவ்வாறு விளக்கப்பட்டிருக்கும் வசனங்களை ஹதீஸ்கள் வாயிலாகவே விவரிக்கவேண்டும். ஏனெனில் “நான் குர்ஆனையும், அதைப்போன்ற ஒன்றையும் வழங்கப்பட்டிருக்கிறேன்” என நபி (ஸல் அவர்கள் கூறியுள்ளனர். அது போன்ற ஒன்று என்பது ” ஸுன்னா” வாகும்.
4. ஸுன்னாவில் அதைப் புரிந்து கொள்ளும் ஆதாரம் கிடைக்காத போது நபி (ஸல் ) அவர்களிடம் கேட்டுத் தெரிந்த நபித் தோழர்களின் சொல் விளக்கத்தின் வாயிலாகப் புரிந்து கொளளவேண்டும். ஏனெனில் குர்ஆன் அருளப்படுவதை நேரிலே கண்டு கற்றுத்தேறியவர்கள்.அவை பற்றிய முழுமையான அறிவு விளக்கமும், தெளிவும் பெற்றுத்தங்கள் வாழ்விலே செயல்படுத்தியவர்கள்.
5. குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ, நாயத்தோழர்களின் தீர்ப்புகளிலோ அதற்குரிய தெளிவோ, ஆதாரமோ கிடைக்காத போது ஸஹாபாக்களிடம் தஃப்ஸீர்களைப் பயின்ற தாபியீன்களின் தீர்ப்புகளைக் கொண்டு குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இவையே பெரும்பாலான இமாம்களான மேதைகள் கடைபிடித்து வந்த நெறிமுறையாகும்.
6. குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டுள்ளதால் அம்மொழி பற்றிய ஆழமான புலமை இருக்கவேண்டும்.
“அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அரபிமொழிப் புலமை இல்லையெனில் இறைவேதத்திற்கு விளக்கம் கூற தகுதியற்றவர்” என்று தப்ஸீர் கலை மேதை இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஆகவே, முஃபஸ்ஸிர் (விரிவுரயாளர்) முஸ்லிமாகவும், கீழ்காணும் பதினைந்து கலைகளைக் கற்றுத் தேறியவராகவும் இருக்கவேண்டும்.
அந்த 15 கலைகள் யாவை?
1. அல்லுகத் (அகராதி ஞானம்) , 2. அந்நஹ்வு ( சொற்புணர்ச்சி இலக்கணம், 3.அஸ்ஸர்பு , அத்தஸரீஃப் (சொல்லிலக்கணம்), 4. அல்இஷ்திகாக் (சொற்களின் தாது இலக்கணம்) 5. அல்மஆனி (அணி இலக்கணம் 6.இல்முல் பதீஉ (அருங்கலை), 7.கிராஅத் (ஓதும் கலை) 8. இல்முல் அகாயித்,9. உஸூலுல் ஃபிக்ஹ் ( இஸலாமிய சட்ட ஞானத்தின் அடிப்படைக்கலை), 10.இல்முல் பயான் ( உரை இலக்கணம்), 11.அஸ்பாபுந் நுஸூல் (குர்அன் வசனங்கள் இறங்கிய காலம்,காரணம் பற்றிய கலை) 12.அந்நாஸிக்,வல்மன்ஸூக் ( மாற்றுவதும், மாற்றப்பட்டதுமான வசனங்கள் பற்றிய விவரம்), 13.அல்பிக்ஹ் (சட்ட ஞானம்) 14.அல்அஹாதீதுல் முபய்யினா லி தஃப்ஸீரில் முஜ்மல் வல்முப்ஹம் (மறைமுகமான பொருள் பற்றி நபி(ஸல்) விளக்கிய கலை) 15.இல்முல் மூஹிபா (இறுதியாக இறைவனின் தனிப் பெரும் ஞானம் பெற்றிருத்தல்)
தஃப்ஸீர்களும், தஃப்ஸீர் மேதைகளும்
புகழ்மிகு தஃ.ப்ஸர்களும், தஃப்ஸீர் கலை மேதைகளும்
1. திருக்குர்ஆனின் முதற்பெரும் விரிவுரையாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்களேயாவார்.
2. அவர்களுக்குப்பின் ஸஹாபாக்களில் குர்ஆனுக்குத் தப்ஸீர்-விரிவுரை செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் :
1. நாயகத் தோழர்கள்
01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி)
02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
03. உத்மான் இப்னு அஃப்பான் (ரலி)
04. அலி இப்னு அபீ தாலிப் (ரலி)
05. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி
06. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
07.உபை இப்னு கஃபு (ரலி)
08.ஸைத் இப்னு தாபித் (ரலி)
09.அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
10.அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை நான்கு பேரிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் எனக்கூறினார்கள்.அவர்கள்:-
1. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) 2. உபை இப்னு க்ஃப (ரலி) 3. முஆத் இப்னு ஜபல்(ரலி) 4. ஸாலிம் மவ்லா அபீ ஹுதைபா (ரலி) (அறிவிப்பவர் அப்துல்லாஹ்’ இப்னு உமர்(ரலி) ஆதாரம்: புகாரி முஸ்லிம்)
2. தாபியீன்கள்
தாபியீன்களில் புகழ்வாய்ந்த முஃபஸ்ஸிரீன்கள்:-
1. இமாம் முஜாஹித் (ரஹ்) ( இவர்களே தாபியீன்களில் புகழ் வாய்ந்த முஃபஸ்ஸிராவார்கள்.)
2. இமாம் ஸயீது இப்னு ஸுபைர் (ரஹ்)
3. இமாம் இக்ரிமா (ரஹ்)
4. இமாம் அதா இப்னு ரபாஹா(ரஹ்)
5. இமாம் ஹஸன் பஸரீ(ரஹ்)
6. இமாம் மஸ்ரூக் (ரஹ்)
7. இமாம் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்)
8. இமாம் அபுல் ஆலியா(ரஹ்)
9. இமாம் ரபீஹ் இப்னு அனஸ்(ரஹ்)
10. இமாம் கதாதா (ரஹ்)
11.இமாம் ளஹ்ஹாக்(ரஹ்)
இவர்கள் மேற்கூறப்பட்ட நாயகத் தோழர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களும்,அவர்களின் மாணவர்களுமாவார்கள்.
4.தபவுத்தாபியீன்கள்.
இவர்கள் தாபியீன்களின் அடுத்த வரிசையில் இடம் பெறுகின்றனர்.
உலகில் இதுவரை இரண்டு இலட்சம் தஃப்ஸீர்கள் (விளக்கவுரை கள்), வெளி வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை:-
5. புகழ் வாய்ந்த தஃப்ஸீர்களும், தொகுத்த இமாம்களும்
வ.எ புகழ்மிகு தஃப்ஸீர்கள் தொகுத்தவர்கள் (முஃபஸ்ஸிரீன்கள்)
01 ஜாமிவுல் பயான்-ஃபீ தப்ஸீருல் குர்ஆன் இமாம் முஹம்மது இப்னு ஜரீர் அத்தபரீ ஹி-310)
02 தப்ஸீருல் குர்ஆனுல் அளீம் இமாம் இப்னு கதீர்-இமாதுத்தீன் அபுல் ஃபிதா(ரஹ்)
03 அல் ஜாமிவு லி அஹ்காமில் குர்ஆன் இமாம் குர்துபீ(ரஹ்)
04 தப்ஸீருல் கஷ்ஷாஃப் இமாம் அபுல் காஸிம் மஹ்மூது இப்னு உமர் ஸமக்ஸரி ஜாருல்லாஹ்(ரஹ்) இவர் மக்கா ஹரமுக் கருகே குடியிருந்ததால் ஜாருல்லாஹ்(அல்லாஹ் வின்அண்டைவீட்டுக்காரர் என அழைக்கப்பட்டார்.
05 தப்ஸீர் ரூஹுல் மஆனி இமாம் ஷிஹாபுத்தீன் அலூஸி(ரஹ்)
06 தப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத் இமாம் அபூ ஹய்யான(ரஹ்)
07 தப்ஸீர் பஹ்ருல் உலூம் ஸமர்கந்தீ இமாம் அபுல்லைத் நஸ்ர் இப்னு முஹம்மது அஸ்ஸமர்கந்தீ(ரஹ்)
08 மஆலிமுத் தன்ஸீல்-தப்ஸீர் பகவீ இமாம் அபூ முஹம்மது அல்- ஹுஸைன் இப்னு மஸ்வூது அல்பகவீ(ரஹ்)
09 அத்துர்ருல் மன்தூர் இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூத்தி(ரஹ்)
10 தப்ஸீர் ஜலாலைன் (இதற்கு இரு ஆசிரி யர்கள். இது தமிழகத்தின் அரபுக் கல்லூரி களில் பாடநூலாக இருந்து வருகிறது 1.இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்)ஹி-864, 2.இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ (ரஹ்)ஹி-911. (அதாவது ஆசிரியர் ஸுயூத்தி (ரஹ்) பாதி எழுதியது் மரணம டைந்தார்.மறுபாதியை அவரது மாணவர் மஹல்லீ எழுதி முடித்தார்.
11 அன்வாருத்தன்ஸீல் வ அஸ்ராருத் தஃவீல் (தப்ஸீர் பைளாவி) இது அரபுக்கல்லூரிகளில் இறுதியாண்டு பாடநூல்) இமாம் நாஸிருத்தீன் அபுல் கைர் அப்துல்லாஹ் அல்- பைளாவீ (ரஹ்).
12 அத்தப்ஸீருல் கபீர் -மஃபாதீஹுல்கைப். இமாம் பக்ருத்தீன் முஹம்மது இப்னு உமர் அத்தைமீ ராஸி(ரஹ்) ஹி-606
13 தப்ஸீர் அபுஸ்ஸுஊது இமாம் அபுஸ்ஸுஊது இப்னு முஹம்மது அல் இமாதீ(ரஹ்)
14 தப்ஸீர் இப்னு மாஜா இமாம் இப்னு மாஜா அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யஸீத்.(ரஹ்)
15 தப்ஸீர் நைஸாபூரீ இமாம் நைஸாபூரீ(ரஹ்)
16 தப்ஸீர் நஸஃபீ இமாம் நஸஃபீ(ரஹ்)
17 தப்ஸீர் அல் கதீப் இமாம் அல் கதீப்(ரஹ்)
18 அல்-கஷ்ஃபு வல்பயான் (தப்ஸீர் தஃலபீ) இமாம் அபூ இஸ்ஹாக் அஹ்மது இப்னு இப்றாஹீம் அத்தஃலபீ
19 அல் முஹர்ரருல் வஜீஸ் இமாம் அபீ முஹம்மது அப்துல்ஹக் இப்னு காலிப் இப்னு அதிய்யா (ரஹ்)
20 அல்-ஜவாஹிருல் ஹஸ்ஸான் இமாம் அபூ ஸைது அப்தூரஹ்மான் அத்தஆலபீ அல்ஜஸாயிரீ
21 தப்ஸீருல் காஸின் இமாம் காஸின்(ரஹ்)
22 ஃபத்ஹுல் கதீர் -தப்ஸீருஷ்-ஷவ்கானீ. (தப்ஸீர் ஷவ்கானி) இமாம் அஷ்-ஷவ்கானி(ரஹ்).
23 அல்புர்ஹானு ஃபீ உலூமில் குர்ஆன் இமாம் அஸ்-ஸர்கஸீ(ரஹ்)
24 தைஸீருல் கரீமுர்ரஹ்மான் அஷ்-ஷைகு அப்துர் ரஹமான் அஸ்-ஸஃதீ(ரஹ்)
25 ஸாதுல் மஸீர் ஃபீ இல்மித்ப்ஸீர் இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்)
26 மஹாஸினுத் தஃவீல் இமாம் அல்-காஸிமீ(ரஹ்)
27 அத்தஃஸீருல் முனீர் லி மஆலி முத் தன்ஸீல் இமாம் முஹம்மது இப்னு உமருல் ஜாவீ நவவீ கி.பி 1898
28 அஹ்காமுல் குர்ஆன் இமாம் ஷாபியீ (ரஹ்)
29 தஃப்ஸீருல் மனார் அஷ்-ஷைகு முஹம்மது ரஷீது ரிளா(ரஹ்)
30 தஃப்ஸீர் ஸூரத்துந்நூர் ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்)
31 அத்தஹ்ரீர் வத்-தன்ஸீல் அல்லாமா அத்தூனிஸித்தாஹிர் இப்னு ஆஷூர்(ரஹ்).
32 அய்ஸருத் தபாஸீர் அஷ்-ஷைகு அபூபக்ர் அல் ஜஸாயிரீ(ரஹ்).
33 ஸஃப்வத்துத் தஃபாஸீர் அஷ்-ஷைகு அஸ்-ஸாபூனி(ரஹ்)
34 நைலுல் மராம் மின் தஃப்ஸீர் ஆயாதில் அஹ்காம் ஷைகு முஹம்மது ஸித்தீக் ஹஸன் கான் (ரஹ்)
35 தப்ஸீர் ஷஃராவி ஷைகு அஷ்-ஷஃராவி(ரஹ்)
36 அந்நபவுல் அளீம் அறிஞர் முஹம்மது அப்துல்லாஹ் தராஸ்(ரஹ்)
37 அல்ஜவாஹிர் ஃபீ தஃப்ஸீரில் குர்ஆனில் கரீம் ஷைகு தந்தாவி ஜவ்ஹரீ (ரஹ்) (1870-1940)
(இது விஞ்ஞான விளக்கங்க ளோடு எழுதப்பட்ட முதல் விரிவுரை நூல்)
38 அத்தப்ஸீர் ஃபீ ளிலாலுல் குர்ஆன் அஷ்-ஷைகு ஷஹீத் சையிது குதுப்
39 பைளுல் கபீர் அஷ்-ஷைகு ஷா வலியுல்லாஹ் அத்தெஹ்லவி(ரஹ்)
40 நள்ராத் ஃபீ கிதாபில்லாஹ் அஸ்-ஸய்யிதா ஸைனபுல் கஸ்ஸாலி.(ரஹ்)(முதல் பெண் குர்ஆன் விரிவுரையாளர என்ற பெருமையைப் பெறுகிறார்)
6. சில அரிய தஃப்ஸீர்கள்
41 தஃப்ஸீர் ஜீலி ஷெய்கு அப்துல் கரீம் ஜீலி.இவர் பிஸமில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம் என்பதி லுள்ள 19 எழுத்துகளுக்கும் 19 தொகுதிகளில் தஃப்ஸீர் எழுதியுள்ளார்.
42 தஃப்ஸீர் அப்துஸ்ஸலாம். அப்துஸ்ஸலாம்.இப்னு முஹம்மது.இவர் 500 தொகுதிகளில் தஃப்ஸீர் எழுதியுள்ளார்.சூரத்துல் பாத்திஹாவிலுள்ள 7 வசனங்களுக்கும்
43 தஃப்ஸீர் இமாம் புகாரி இமாம் முஹம்மது இஸ்மா யீல் புகாரி(ரஹ்).1000 தொகுதி் களில் ஒரு தஃப்ஸீர எழுதியுள் ளார்கள். அது இப்போதுகிடைப் பதில்லை.
44 தஃப்ஸீர் இமாம் கஸ்ஸாலி இமாம் கஸ்ஸாலிர(ரஹ்).80 தொகுதிகளில் ஒரு தஃபஸீர்.
45 தி குர்ஆன் ( The Qur’an),ஆங்கிலம் அல்லாமா யூஸுப் அலி ( முதல் ஆங்கில மொழி பெயர்ப்பு)
46 தி குளோரியஸ் குர்ஆன் (The Glorious Qur’an) (ஆங்கிலம்) முஹம்மத் மார்மடியூக் பிக்தால்.12 மொழிகளில் தேர்ந்த கிறித்தவரான இவர் இஸலாத்தைத் தழுவிய பின் ஆங்கிலத்தில் எழுதிய மொழியாக்கம்.
47 தி நோபிள் குர்ஆன் (The Noble Qur’an)(ஆங்கிலம்). டாக்டர் முஹம்மத் தகிய்யுத்தீன் அல்-ஹிலாலி டாக்டர் முஹம்மத் முஹ்ஸின் கான். ( தாருஸ்ஸலாம்,ரியாள் (KSA) வெளியீடு)
48 தர்ஜுமானுல் குர்ஆன்(ஆங்கிலம்) இந்திய முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆஸாத்.
49 தர்ஜுமத்துல் குர்ஆன்(தமிழில்) ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி.சென்னை.தமிழில் வந்த முதல் மொழியாக்கம்.
50 தஃப்ஸீர் ஹமீது (தமிழில்) எஸ்.எஸ். அப்துல் காதிர் பாக்கவி.உத்தம பாளையம்.
51 அன்வாருல் குர்ஆன் (தமிழில்) அப்துர்ரஹ்மான் நூரிய்யி, பாஸில் பாக்கவி. தென்காசி. தமிழில் வெளிவந்த முதல் முழு தஃப்ஸீர்.
52 தஃப்ஹீமுல் குர்ஆன் (தமிழில்) மவ்லானா அபுல் அஃலா மவ்தூதீ.வசனத்தின் பின்னணி கள்,அருளப்பட்ட காரணங்கள், கருத்துரைகள்,படிப்பினைகள் இதில் சுருக்கமாக விளக்கப் படுகின்றன.
53 குர்ஆன் மஜீத் (தமிழில்) ஜான் அறக்களை (மூலமும் தமிழும்)ஹாஜி முஹம்மது் ஜான் அவர்களால்வெளியிடப் பட்ட இந்நூல் 14 பதிப்புகள் வரை வந்துள்ளன.1,58,000 பிரதி கள் வரை விற்பனையாகி யுள்ளன.தமிழில் அதிகமாக விற்பனையான முதல் தமிழாக்கம் இதுவே.இவரே 1960ல்நியூயார்க் நகரில் முதல் பள்ளிவாசல் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 400க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள் அங்கு எழுந்துள்ளன.
54 திருக்குர்ஆன் (தமிழில்) பி.ஜைனுல் ஆபிதீன் குர்ஆன் அறிமுகம்,வசனப்பின்னணிகள், அறிவியல்,வரலாற்றுப் விளக் கங்களுடன் எழுதப்பட்ட அரிய நூல்.
55 திருக்குர்ஆன் (தமிழில்) திருக்குர்ஆன் அறக்கட்டளை. கோயம்பத்தூர்.(தமிழாக்கமும் கருத்துரையும்)
56 திருக்குர்ஆன் (தமிழில்) மன்னர் ஃபஹ்து குர்ஆன் வளாகம்,மதீனா முனவ்வரா.
இதுவரை வெளிவந்துள்ள இரண்டு இலட்சம் தப்ஸீர்களில், மொழி பெயர்ப்பகளில் 20,000 விளக்க வுரைகளுக்குக் குறையாமல் திரிப்போலியிலுள்ள நூல்நிலையத்தில் இருப்பதாக டாக்டர் அர்னால்ட் கூறுகிறார்.
ஆங்கிலம் இலத்தீன், ஜெர்மனி டச்சு ,பிரஞ்சு,ரஷ்யா ஆகிய மொழிகளிலெல்லாம் திருக்குர்ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மதீனாவிலுள்ள மன்னர் ஃபஹ்து குர்ஆன் வெளியீட்டகம் மட்டும் இதுவரை 150 மொழிகளில் குர்ஆனை மொழியாக்கம் செய்து பலகோடி பிரதிகளை ஆண்டு தோறும் ஹஜ்ஜுக்கு வரும் ஹாஜிகளுக்கும், உலகிலுள்ள பல பாகங்களுக்கும் இலவசமாக வினியோகம் செய்து வருவது குறிப்பிடத் தக்கது.
மூலமொழி பாதுகாக்கப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள் எத்தனை வந்த போதிலும், அரபி மூலம் (அஸல்) தூய்மையுடன் ஒருபுள்ளிகூட மாற்றப்படாமல் பேணிப் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.
குர்ஆனை முழுமையாக மொழிபெயர்க்க முடியாது.
எத்தனை தஃப்ஸீர்கள் மொழிபெயர்ப்புகள் உலகில் வெளிவந்த போதினும் அவற்றுள் ஒன்றையேனும்,திருக்குர்ஆனுக்கு முழுமை யான மொழிபெயர்ப்பு என்றோ, விளக்கவுரை என்றோ கூறிவிட முடியாது.அவ்வாறு ” எழுதிவிடவும் முடியாது” (குர்ஆன் 18: 109)
ஏனைய வேதங்களெல்லாம் காலத்தால், காலத்தின் கோலத்தால், மனிதக் கரங்கள் ஊடுருவி உருமாறி அதன் அசல் தன்மையையும், புனிதத் தன்மையையும் இழந்திருபபதைக் காணலாம்.
அவ்வப்போது வேதங்களையெல்லாம் தங்கள் விருப்பப்படி மாற்றி வருவதை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து இன்று உலகின் முன், தோலுருத்திக் காட்டி வருகின்றனர். இன்றுவரை எல்லா மதத்தினரும் ஏமாற்றப்பட்டு வந்ததை இப்போது தான் உலகம் உணர்ந்து வருகிறது.
No comments:
Post a Comment